இது தேர்தல் வருடம் இல்லை; தீர்வைக் காண வாருங்கள்! எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு
இந்த வருடம் அரசியல், பொருளாதார ரீதியில் தீர்வைக் காண்பதற்கான வருடம், இது தேர்தலுக்கான வருடம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் நாடாளுமன்றம் தீர்க்கமான முடிவு ஒன்றை விரைவில் எடுக்கும். எனவே, மக்கள் குழப்பம் அடையத் தேவையில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், தீர்வைக் காண ஒன்றிணையுமாறு எதிர்க்கட்சிகளுக்கு நான் பல தடவைகள் அழைப்பு விடுத்த போதிலும் அது தொடர்பில் அக்கறை செலுத்தாத அந்த கட்சிகள், தேர்தல் வேண்டும் என்று கோரி காலத்தை இழுத்தடிக்க முனைகின்றன.
அரசியல் தீர்வையும், பொருளாதாரத் தீர்வையும் விரும்பாத எதிர்க்கட்சிகள், தங்கள் சுயநலன்களுக்காகவே இல்லாத தேர்தல் ஒன்றைக் கோரி வருகின்றன.
நாடு பொருளாதார ரீதியில் பெரும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் – இவ்வருடம் தேர்தலை நடத்துவதற்கு நிதி இல்லை என்று அறிந்து கொண்டும் தேர்தல் வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அடம்பிடிக்கின்றன.
எதிர்க்கட்சிகளின் கோமாளித்தன அரசியலுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சிக்கியுள்ளது. அதனால் தான் அந்த ஆணைக்குழு வாரத்துக்கு ஒருமுறை ஒவ்வொரு அறிவிப்புக்களை விடுத்து வருகின்றது என குறிப்பிட்டுள்ளார்.