வரலாற்றில் பதிவான தேசிய மக்கள் சக்தியின் வெற்றி!

2024 பொதுத் தேர்தல், தேசிய மக்கள் சக்திக்கு ஒரு வரலாற்று வெற்றியை தேடித் தந்துள்ளது.

இதன்படி, இந்நாட்டின் வரலாற்றில் பொதுத் தேர்தல் ஒன்றில் கட்சி ஒன்று பெற்ற அதிகூடிய வாக்கு எண்ணிக்கையை தேசிய மக்கள் சக்தி பதிவு செய்துள்ளது.

அதன்படி, தேசிய மக்கள் சக்தி 6,863,186 வாக்குகளைப் பெற்றுக் கொண்டது.

இதற்கு முன்னர், இந்நாட்டின் வரலாற்றில் அதிக வாக்குகளாக 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெற்ற 6,853,690 வாக்குகளின் சாதனையை முறியடித்து தேசிய மக்கள் சக்தி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதேபோல், பொதுத் தேர்தலில் கட்சியொன்று பெற்ற அதிக வாக்கு சதவீதமும் இதுவாகும்.

அது, 61.56% ஆக பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 60.33% வாக்குகளைப் பெற்றிருந்தது.

மேலும், பொதுத் தேர்தல் ஒன்றில் அதிக மாவட்டங்களில் வெற்றி பெற்ற கட்சியாகவும் தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் தவிர்ந்த 21 தேர்தல் மாவட்டங்களிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெற்றுள்ளது.

இதற்கு முன்னர் 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு 19 மாவட்டங்களில் வெற்றிப் பெற்று சாதனை படைத்திருந்தது.

மேலும், இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற கட்சி என்ற சாதனையையும் தேசிய மக்கள் சக்தி படைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி 152 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ள நிலையில் முன்னதாக 2010 இல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 136 தொகுதிகளை கைப்பற்றியிருந்தது.

அதேபோல், 2020 இல் 128 ஆசனங்களை வென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன படைத்த சாதனையை முறியடித்து, தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை பெற்று மாவட்ட மட்டத்தில் அதிகூடிய ஆசனங்களை பெற்று புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

அதன்படி, பொதுத் தேர்தலில் அதிக தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்ற கட்சி என்ற சாதனையைும் தேசிய மக்கள் சக்தி நிகழ்த்தியுள்ளது.

2020 இல் பொதுஜன பெரமுன பெற்ற 17 தேசிய பட்டியல் ஆசனங்களின் சாதனையை முறியடித்த தேசிய மக்கள் சக்தி 18 தேசிய பட்டியல் ஆசனங்களை சொந்தமாக்கியது.

அதன்படி, பொதுத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அதிக இடங்களைப் பெற முடிந்தது.

இதற்கு முன்னர் 2020 இல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 145 ஆசனங்களை மட்டுமே பெற்றிருந்தது.

விகிதாசார முறையின் கீழ் பாராளுமன்றத்தில் உள்ள 225 ஆசனங்களில் 2/3 ஆசனங்களை தனியொரு கட்சி கைப்பற்றுவது இதுவே முதல் தடவையாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button