பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
பசிபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) – இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கமானது பப்புவா நியூ கினியாவின் (Papua New Guinea) வடக்கு பகுதியில் இன்று (15.4.2024) காலை 6.56 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
இந்நிலநடுக்கம் நியூ பிரிட்டன் தீவின் கிம்பே பகுதியில் இருந்து கிழக்கு-தென்கிழக்கே 110 கி.மீ. தொலைவில், 64 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு தெரிவிக்கின்றது.
நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
எனினும், இதனால் சுனாமி (Tsunami) எச்சரிக்கை எதுவும் இல்லை என அமெரிக்க நிலநடுக்க அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த மாதம் பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட ரிக்டரில் 6.9 அளவிலான நிலநடுக்கத்தால் 5 பேர் வரை உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடியிருப்புகள் மற்றும் வீடுகளை இழந்ததுடன் பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.