அனைவருக்கும் போதிய வாழ்வாதாரம் விரைவில் : ரணில் விக்ரமசிங்க

அனைவருக்கும் போதிய வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம் : ரணில் விக்ரமசிங்க | Our Aim Is To Provide Adequate Livelihood For All

நாடு சரிவு நிலையில் இருந்து மீண்டிருந்தாலும், நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை என சுட்டிக்காட்டிய அதிபர் ரணில் விக்ரமசிங்க, எதிர்பார்க்கும் இலக்குகளை அடைந்துகொள்ள அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.

அரசியல் கொள்கைகளுக்கு மாறாக அரசியலமைப்பின் 06 அத்தியாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அரச கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை நியதிளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நேற்று (28) நடைபெற்ற 2023 சனச தேசிய மாநாட்டிலேயே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய  ரணில் விக்ரமசிங்க,

“இந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு சனச போன்ற நிறுவனங்கள் உந்து சக்தியாக உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார்.

மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி சுபீட்சமான நாட்டைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துடன் இணைந்து கொள்ளுமாறும் அனைத்து அரச மற்றும் தனியார் துறையினரிடத்திலும் வேண்டுகோள் விடுத்தார்.

சனச வியாபாரத்தை ஆரம்பித்தமைக்காக நாம் கிரிவந்தெனியவுக்கு நன்றி கூற வேண்டும். அவர் ஆரம்பித்த வியாபாரத்தை வெற்றிகரமானதாக மாற்றியுள்ளார். இதனை மேலும் முன்னேற்ற வேண்டும். இந்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தில் சனச வியாபாரத்தையும் இணைத்துக்கொண்டு நாம் முன்னோக்கிச் செல்வோம்.

இவ்வருட இறுதிக்கும் சர்வதேச நாணய நிதியம் நமது நாடு கடன்களை நிர்வகிக்கக்கூடிய நிலையான தன்மைக்கு வந்துள்ளெதென அறிவிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதனால் மட்டும் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது. கடன்களை மீளச் செலுத்துவதற்கான சலுகை வட்டியை கோரிய பின்னர் கடன்களை செலுத்த முடியும்.

மேலும் புதிய கடன்களை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமும் ஏற்படும். இந்த பணிகளை முன்னெடுத்துச் செல்ல எமக்கு வலுவான பொருளாதாரமொன்று அவசியம். இதன்போது ஏற்றுமதி பொருளாதாரம் தொடர்பில் விசேட அவதானம் செலுத்த வேண்டும். இந்த வேலைத்திட்டங்களில் சனச வியாபாரம் இணைந்துகொள்வதை பெரும் உந்துசக்தியாக கருதுகிறோம்.

நாம் ஆட்சியை பொறுப்பேற்றதன் பின்னர், அரசியல் கொள்கைகளுக்கு மாறாக அரசியலமைப்பின் 06 அத்தியாத்துக்கமைவான அரச கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதற்கான அடிப்படை நியதிளுக்கு அமைவாகவே அரசாங்கம் செயற்படுகிறது.

அரச மற்றும் தனியார் துறைகளின் பொருளாதார செயற்பாடுகளின் வாயிலாக நாட்டுக்குள் துரிய அபிருத்தியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும் எமக்கு துரித அபிவிருத்தியே அவசியப்படுகிறது.

அனைவருக்கும் போதிய வாழ்வாதாரம் கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கம். நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் பலரும் வாழ்வாதாரத்தை இழந்தனர். சில வியாபாரங்கள் மூடப்பட்டன.

நாம் அனைவரும் நெருக்கடிகளுடனேயே வாழ்ந்தோம். நாம் தற்போது மீண்டும் அபிவிருத்தி கண்டு வருகிறோம். விவசாய செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளோம். சுற்றுலாத்துறை அபிவிருத்து அடைகிறது. சுற்றுலாத்துறைக்குள் பல்வேறு தொழில் வாய்ப்புக்கள் உருவாகின்றன. அதனால் அனைவரும் ஒன்றுபட்டு அந்த துறையை பலப்படுத்த வேண்டும்.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் போதிய வாழ்வாதாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக பொறுமையுடன் பயணிக்க வேண்டும். சரிவடைந்த இடத்திலிருந்து முன்னேறி வந்துள்ளோம். இருப்பினும் பயணம் இன்னும் முடியவில்லை.

அடுத்த ஜனவரி மாதத்திலிருந்து மேலும் சில வருடங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தி நாம் செயற்பட வேண்டியிருக்கும்.

அன்று நமது நாடு நடுத்தர வருமானம் பெற்றது. இன்று குறைந்த வருமானம் பெரும் நாடாக மாறியுள்ளோம். மீண்டும் நடுத்தர வருமானம் ஈட்டும் நாடாக மாறுவதற்கே முயற்சிக்கிறோம். அதன் பின்னர் உயர் வருமானம் ஈட்டும் நாடாக மாற வேண்டும். 2048 வரையில் அதற்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

எமது நாட்டின் கல்வியிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அதனால் பலரும் உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். தொழில் கல்விக்கு பாரிய கேள்வி காணப்படுகிறது. இருப்பினும் அதனை பெற்றுக்கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனாலேயே கல்வித்துறையை மறுசீரமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

மேலும் 2030 களில் ஆங்கில மொழியை பாடசாலைக் கல்வி மற்றும் உயர்கல்வியில் உள்வாங்குவதற்கான வேலைத்திட்டத்தை செயற்படுத்துவோம். பின்னர் தொழில் கல்விக்கான முழுமையான மறுசீரமைப்பை இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம்.

அத்தோடு விவசாய நவீன மயப்படுத்த வேலைத்திட்டத்தில் பங்களிப்புச் செய்ய சனச போன்ற நிறுவனங்களுக்கு பெரும் வாய்ப்புள்ளது. அதனோடு ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button