தபால் மூல வாக்களிப்பிற்காக 7 இலட்சம் பேர் விண்ணப்பம்
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக சுமார் 700,000 தபால் மூல வாக்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு (Election Commission of Sri lanka) தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து மார்ச் 3 ஆம் திகதி முதல்17 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அத்துடன், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பணிகளுக்கான அரச அதிகாரிகள் குறித்த தகவல் கணக்கெடுப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, எந்தவொரு அரச அதிகாரியும் இன்று வரை தங்கள் தகவல்களை வழங்கவில்லை என்றால், அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட அதிகாரியின் அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல் அலுவலகத்திற்கு, அவர்களின் நிறுவனத் தலைவரின் பரிந்துரைகளுடன் அனுப்புமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) கோரியுள்ளார்.
இதேவேளை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் தபால் மூல வாக்களிப்புகள் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.