ஜனாதிபதி மானியம் என்ற பெயரில் போலிச் செய்தி!
ஜனாதிபதி மானியம்’ என்ற பெயரில் பரப்பப்படும் போலிச் செய்திகள் பற்றி விழிப்புணர்வுடன் இருக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
ஜனாதிபதியின் மானியம், என்ற தலைப்பில் அரசு உதவித் திட்டம் பற்றிய ஒரு போலிச் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இவை சில ஊடகங்கள் மூலமும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களைப் பெற செய்தியுடன் ஒரு போலி இணைப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இச்செய்தி முற்றிலும் பொய்யானது. இவ்வாறானதொரு வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தால், அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த முடிவை பொது மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெரிவிப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.
சமூக ஊடக ஆர்வலர்கள், அரசாங்கத்தின் அறிவிக்கப்படாத பொதுக் கொள்கைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தவறான வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் அடிப்படையற்ற தவறான வதந்திகளை ஏற்கவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று பொதுமக்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது” என்றுள்ளது.