தொடருந்து திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு மற்றும் பணத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பில் இலங்கை தொடருந்து திணைக்களம் (Sri Lanka Railway Department) விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தொடருந்து இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் தொடருந்து நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், தொடருந்திற்குள் அனுமதி சீட்டுகளை சரிபார்க்கும் போதும், அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி நாளை (01)முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலைத் தொடருந்து நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை நாட்டில் தொடருந்து சேவையை நாளாந்தம் 70 சதவீதமாக அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக தொடருந்து திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜெயசுந்தர (Dhammika Jayasundara) அண்மையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.