நாட்டின் நிலை குறித்து ரிஷாட் பதியுதீனின் ஊடக சந்திப்பு!
கடந்த கால ஆட்சியாளர்கள் விட்ட தவறுகளும், பிழையான வழிநடத்துல்களும்தான் நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு சென்றிருக்கிறது என அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
புத்தளத்தில் நேற்றிரவு (16) இடம்பெற்ற வேட்பாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கையில் நாளுக்கு நாள் பொருட்களின் விலைகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
மின்சாரக் கட்டணம் இலங்கையில் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக அறிவித்துள்ளார்கள்.
இவ்வாறான பொருளாதார அழுத்தங்களால் மக்கள் எப்படி வாழ்க்கை நடத்துவது என்று தெரியாமல் திண்டாடுகின்றனர்.
மக்கள் மீது மேலும் பொருளாதார சுமைகளை திணிக்காமல் மாற்று வழிகளை கையாள, பாரிய சரிவை நோக்கி செல்லும் பொருளாதாரத்தை சரிசெய்ய அரசு அவசரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் , கடந்த ஆட்சியாளர்கள் செய்த தவறுகளால் ஏற்பட்ட நஷ்டங்களுக்கு ஈடுசெய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. நாடு இந்த மோசமான நிலைமைக்கு அவர்கள்தான் காரணம்.
நாட்டை இந்தளவுக்கு கொண்டு சென்ற ஆட்சியாளர்களிடமிருந்து பெறவேண்டியவற்றை பெற்று நாட்டையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருக்கிறது என்றார்.