இரண்டு மாதங்களில் பாரிய வீழ்ச்சியடையும் ரூபாவின் பெறுமதி..!
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை வைத்திருந்த தரப்பினர் அந்த டொலர்களை சந்தையில் விடுவித்தமையும் இந்த நிலைமைக்கு மற்றொரு காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.
சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வலுவான நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது, ஆனால் வருட இறுதியில் இலங்கை ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சியடையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 20 வீதத்தால் வீழ்ச்சியடையும் என ஃபிட்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த வருட இறுதிக்குள் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 390ஆக குறையலாம் என ஃபிட்ச் நிறுவனம் கணித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே பேராசிரியர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், ஃபிட்ச் மதிப்பீட்டின் அறிக்கை இருந்த போதிலும், இலங்கை தனது பொருளாதார விவகாரங்களை சரியான முறையில் நிர்வகித்து, அதன் அந்நிய செலாவணி ஈட்டுதலை வலுப்படுத்தி, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதில் திறம்பட செயல்பட்டால், இலங்கை ரூபா மதிப்பு வீழ்ச்சியின் சாத்தியத்தை முறியடிக்கும் சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் ரூபாவின் பெறுமதி வலுவடைவது நாட்டின் பொருளாதார செயற்பாட்டின் விளைவு அல்ல என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.
ஆனால் அதை நீண்ட காலத்திற்கு பராமரிக்க முடியாது. இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் ரூபா மதிப்பு மிக வேகமாக வீழ்ச்சியடைய வாய்ப்பு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.