புலமைப்பரிசில் வழங்கும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை!

புலமைப்பரிசில் வழங்கும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை! | Gread 5 Schoolarship Susil Premajayantha Sl

ஐந்தாம் தர புலமைப் பரிசிலுக்காக ஒதுக்கப்படும் 750 ரூபாவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(17) டளஸ் அழகப்பெரும மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் .

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

“தரம் 5 புலமைப்பரிசிலுக்கு சிங்கள மொழி மூலம் 20.000 மாணவர்களையும் தமிழ் மொழி மூலம் 5,000 மாணவர்களையும் உள்ளடக்கியே வெட்டுப்புள்ளி வருகிறது.

இந்த வெட்டுப் புள்ளியானது மாணவர்கள் சித்தியடையவில்லை என்பது அல்ல. புலமைப் பரிசில் வழங்க எதிர்பார்க்கும் மாணவர்களின் ஒரு பகுதியை வைத்தே இது நிர்ணயிக்கப்படுகிறது.

நூற்றுக்கு அதிகமான புள்ளிகளை மதிப்பிடுமாறு அமைச்சர் பந்துல குணவர்தன ஆலோசனையொன்றை சபையில் முன் வைத்தார்.

அதில் சிங்கள மொழி மூல மாணவர்கள் 20,000 பேர், தமிழ் மொழி மூல மாணவர்கள் 5000 பேர் என்ற எண்ணிக்கையை மேலும் அதிகரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

புலமைப்பரிசில் வழங்கும் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்தால் வெட்டுப்புள்ளி மேலும் சிறிது குறைவடையும். அத்துடன் புலமைப் பரிசிலுக்காக ஒதுக்கப்படும் 750 ரூபாவை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை 1500 ரூபாவாக அதிகரிக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாக உள்ளது. அது தொடர்பில் நாம் ஒரு வேலைத்திட்டத்தை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

இந்த விடயங்கள் தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படும். வரவு செலவுத் திட்டத்திற்குள்ளேயே அது தொடர்பில் கவனம் செலுத்த முடியும்.

அத்துடன் பாடசாலை சீருடைகளுக்காக 7 பில்லியன் ரூபா நிதி இம்முறை ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அதில் நான் 5.5 பில்லியனை அரசாங்கத்திற்கு மீதப்படுத்தி வழங்கியுள்ளேன்.

சீனத் தூதுவருடன் நான் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் பயனாக அந்த நாட்டிலிருந்து எமக்கு சீருடைத் துணி கிடைக்கவுள்ளது. மூன்று கப்பல்கள் சீருடைத் துணியுடன் விரைவில் நாட்டுக்கு வரவுள்ளன.

அதேவேளை, இலவச பாடப்புத்தகங்களுக்காக 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இம்முறை பதிப்பாளர்களுக்கு டெண்டர் வழங்கும்போது அந்தத் தொகை மேலும் குறைந்துள்ளது.

அதன் மூலமாக நிதியை மீதப்படுத்தி அரசாங்கத்திற்கு வழங்க முடியும். அத்துடன் வெளிநாடொன்றின் உதவியுடன் பாடசாலை மாணவர்களின் பகல் உணவிற்காக நிதியை பெற்றுக் கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்றை மேற்கொண்டுள்ளோம்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button