பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டிலுள்ள பாடசாலைகளில் (Schools) கல்விசாரா ஊழியர்கள் இன்று (24) மற்றும் நாளை (25) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கமைய பாடசாலைகளை நடத்துவது தொடர்பில் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் (Ministry of Education) அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலை சமூகத்துடன் இணைந்து பாடசாலைகளின் செயற்பாடுகளை நிர்வகிப்பதற்கான முறையான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை அனைத்து மாகாண கல்விச் செயலாளர்கள் மற்றும் அனைத்து மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகள், கல்லூரிகள், கல்வி அலுவலகங்கள், மாணவர் சமூகம் மற்றும் பௌதீக வளங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் (Ministry of Defence) செயலாளரிடம் கல்வி அமைச்சின் செயலாளரினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.