நியூஸிலாந்து சுற்றுலாவில் இலங்கையின் சுழல் பந்து வீச்சாளருக்கு வாய்ப்பில்லை
இலங்கை கிரிக்கெட் அணி, மூன்று போட்டிகள் கொண்ட 20க்கு 20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக நேற்று இரவு நியூசிலாந்துக்கு புறப்பட்டு சென்றுள்ளது.
இந்தநிலையில், இலங்கை அணித் தலைவர் சரித் அசலங்க(Charith Asalanka), நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்துள்ளார்.
நியூசிலாந்தின் ஆடுகள நிலைமைகளுக்கு ஏற்ப கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் தேவை என்பதை சுட்டிக்காட்டி, இளம் சுழற்பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகேவை(Dunith Wellalage) அணியில் இருந்து நீக்க முடிவெடுக்கப்பட்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இது தனக்கும், தேர்வுக் குழுவிற்கும், பயிற்சியாளருக்கும் மிகவும் கடினமான முடிவாகும்.
சில நேரங்களில், நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் விளையாடும்போது இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்பட வேண்டியிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அணிக்கும் நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான 20க்கு 20 மூன்று போட்டிகளும், டிசம்பர் 28 மற்றும் 30 ஆகிய தினங்களில் திட்டமிடப்பட்டுள்ளன, அதைத் தொடர்ந்து 2025 ஜனவரி 2 ஆம் திகதியன்று இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.