சர்வதேச ரீதியில் இலங்கைக்கு கிடைத்த அங்கீகாரம்!
ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையினால் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்கு (UNCITRAL) தெரிவு செய்யப்பட்ட முப்பத்தொரு (31) உறுப்பினர்களில் இலங்கையும் ஒன்றாகும் என வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கை ஆசிய பசுபிக் குழுவில் ஆசனமொன்றிற்குப் போட்டியிட்டு மொத்தமாக 177 வாக்குகளைப் பெற்றது.
இது குழுவிற்குள் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான வாக்குகளாவதுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட முப்பத்தொரு உறுப்பினர்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட இரண்டாவது அதிக வாக்குகளாகும்.
மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், வியட்நாம், சீனா, ஜப்பான் மற்றும் கொரியக் குடியரசு ஆகியவை ஆசிய பசிபிக் குழுவிலிருந்து, சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற உறுப்பு நாடுகளாகும்.
இலங்கையானது, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், ஆறு(6) வருட காலத்திற்கு இதில் பணியாற்றவுள்ளது.
கடந்த 1966 இல் நிறுவப்பட்ட சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழு, வியன்னாவை தலைமையகமாகக் கொண்டதுடன், சர்வதேச வர்த்தகத் துறையில் முக்கிய சட்ட அமைப்பாகவும் விளங்குகிறது.
வர்த்தகத்திற்கான தடைகளை நீக்குதல் மற்றும் வர்த்தகச் சட்டங்களை ஒருங்கிணைத்தல் ஆகியவை இதன் அடிப்படைப் பணிகளாகும்.
சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவானது, தனது உறுப்பு நாடுகளுக்கு தொழில்நுட்ப உதவியையும் வழங்குகிறது.
இலங்கை இணக்கத்தீர்வுச் சட்டம் மற்றும் மின்னணு பரிவர்த்தனை சட்டம் போன்ற வர்த்தகம் மற்றும் முதலீட்டை எளிதாக்குவதற்கான இலங்கையின் சட்டங்கள், சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் மாதிரிச் சட்டங்களால் பயனடைந்துள்ளன.
இலங்கை இதற்கு முன்னர் 2004 – 2007 மற்றும் 2016 – 2022 ஆகிய காலப்பகுதிகளில் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஐக்கிய நாடுகளின் ஆணைக்குழுவின் உறுப்பினராகப் பணியாற்றியுள்ளது.