மருத்துவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணிப்புறக்கணிப்பில்
நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளை உள்ளடக்கி மாகாண மட்டத்தில் அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று (02) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டைத் தணிக்க அரசாங்கம் மருத்துவர்களைத் தக்கவைக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி ஊவா மாகாணத்தில் இன்று காலை 08.00 மணி முதல் 24 மணித்தியால அடையாள பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சம்மில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பளப் பிரச்சினை, அரச பல்கலைக்கழகங்களுக்கான நிதியை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி இன்று அனைத்து அரச பல்கலைக்கழகங்களிலும் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்க சம்மேளனத்தின் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.