மாத சம்பளத்தில் செலுத்த வேண்டிய வரியின் அளவு – வெளியாகிய விபரம்
ஒரு இலட்சம் ரூபாய் மாத வருமானத்தைப் பெறும் ஒருவர் 6 வீதத்திலிருந்து 36 வீதம் வரையில் வரி செலுத்த வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் சுயாதீன உறுப்பினர்கள் குழுவின் நாடாளுமன்ற உறுப்பினர்பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தேசிய பத்திரிகை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
கடந்த ஜனவரி மாதத்தில் அரச வருமானம் 158.7 பில்லியனாக இருக்கும் நிலையில் அரச செலவுகள் 367.8 பில்லியனாக உயர்ந்துள்ளது.
உங்களது கட்சி ஆட்சியிலிருந்திருந்தால் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்காக எடுக்கும் செயற்பாடுகள் என்ன? என வினவப்பட்ட கேள்விக்கு தொடர்ந்தும் பதிலளித்த அவர்,
“அரச வருமானங்கள் வரிகளாலேயே அதிகரிக்கப்பட வேண்டும். எனினும் வரி விதிக்கப்பட வேண்டியது மக்களால் தாங்கிக் கொள்ளக் கூடிய வகையில் மாத்திரமேயாகும்.
ஒரு இலட்சம் ரூபாய் மாத வருமானத்தைப் பெறும் ஒருவர் 6 வீதத்திலிருந்து 36 வீதம் வரையில் வரி செலுத்த வேண்டும். வங்கி வட்டி அதிகம் என்பதால் வியாபாரங்களைச் செய்தும் வாழ்க்கை நடத்த முடியாது.
35 வீதம் வட்டியைச் செலுத்தி வியாபாரத்தில் இலாபம் ஈட்ட முடியாது. மின்சாரக் கட்டணங்கள் பாரியளவில் அதிகரிக்கப்பட்டுள்ளதால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பொருளாதாரம் வீழ்ச்சியடைகின்றது.
இவ்வாறான நிலையில் அரச வருமானத்தை அதிகரித்துக் கொள்வது முடியாத காரியமாகும். நாம் ஆட்சிக்கு வந்தால் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக முதலீட்டுச் சபை நடைமுறைகளை ஒழுங்கு படுத்துவோம்.
ஊழல் மோசடிகளை ஒழிப்போம். வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வசதிகளை அதிகரிப்போம். பொருட்கள் ஏற்றுமதிக்கான வெளிநாட்டு சந்தையினை உருவாக்குவோம். சுற்றுலாத்துறையினை முன்னேற்றுவோம்.
மக்கள் வரி செலுத்த தயார். எனினும் நாட்டில் செலவுகள் அதிகமாகும். நாட்டில் அதிகளவான இராஜாங்க அமைச்சர்கள் பராமரிக்கப்படுகின்றார்கள்.
வாகனங்கள் மாத்திரம் 340 உள்ளன. அவற்றைக் குறைப்போம். மக்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தில் வரி செலுத்தும் நிலையில் நாட்டில் ஊழல் மோசடிகள், வீண்விரயங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.