இலங்கையில் வரிகள் மறு ஆய்வு செய்யப்படுவது குறித்து வெளியான தகவல்!
இலங்கையுடனான பணியாளர் மட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விதிக்கப்பட்டுள்ள சில வரிகளை, அரசு மறு ஆய்வு செய்யக்கூடிய சாத்தியக்கூறுகளைச் சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மெய்நிகர் சந்திப்பு ஒன்றின்போது, சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இதனைத் தெரிவித்துள்ளனர்.
மெய்நிகர் சந்திப்பை நடத்துவதற்குச் சர்வதேச நாணய நிதியம், ஆரம்பத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கங்களை அணுகியுள்ளன.
இருப்பினும், ஏனைய துறைகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளலாம் என்று அதிகாரிகள் பின்னர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள், தொழிற்சங்கங்களுக்கு இலங்கைக்கான அவர்களின் வேலைத்திட்டம் மற்றும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாடு எதிர்பார்க்கும் சீர்திருத்தங்கள் குறித்து விளக்கமளித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், தங்களுக்கு நியாயமான பிரச்சினைகள் இருப்பதை ஏற்றுக்கொண்டதாகவும், தாம் சமர்ப்பித்த வரி முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்படும் என்று உறுதியளித்ததாகவும் தொழில் வல்லுநர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.