போக்குவரத்து சேவைகள் தொடர்பில் புதிய நடைமுறை..!
பொதுப் போக்குவரத்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வகையிலானா முறையை மீண்டும் அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தம் இன்று காலை கைச்சாத்திடப்பட்டது.
கொட்டாவ மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், பின்னர் இதனை நாடளாவிய ரீதியில் பயன்படுத்தும் வகையில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
முதற்கட்டமாக, பேருந்து சேவைகளுக்கு முற்கொடுப்பனவு அட்டை அறிமுகப்படுத்தப்பட்டு, பின்னர் தொடருந்து சேவைகளுக்கும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த முற்கொடுப்பனவு அட்டையை அரச வங்கிகள் ஊடாக பொதுமக்கள் பெற்றுக்கொள்ள தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
காலி – மகும்புர இடையே அதிவேக நெடுஞ்சாலை பேருந்துகளில் பயணிக்க நாளை (2) முதல் முற்கொடுப்பனவு அட்டைகள் வழங்கப்படும் எனவும், அவற்றை மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கி ஆகியவற்றில் கொள்வனவு செய்ய முடியும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் கலாநிதி திலான் மிராண்டா தெரிவித்தார்.
குறித்த முற்கொடுப்பனவு அட்டை வழங்குவது தொடர்பாக வங்கிகளுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டதாகத் தெரிவித்த மிராண்டா, முதற்கட்டமாக நெடுஞ்சாலைகளில் ஓடும் பேருந்துகளில் இந்த அட்டை அறிமுகப்படுத்தப்படும் என்றும் குறிப்பிட்டார்.