துருக்கியில் இருந்து நேரடி விமான சேவை ஆரம்பம்
துருக்கி விமான சேவையின் முதல் விமானம் இலங்கையுடன் நேரடி விமான சேவையை ஆரம்பித்து இன்று (30) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இதற்கமைய துருக்கியின் இஸ்தான்புல்லில் இருந்து இன்று அதிகாலை 5.40 மணி அளவில் TK-730 என்ற விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த விமானத்தின் ஊடாக 261 பயணிகள் இலங்கையை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விமானம் இஸ்தான்புல்லில் இருந்து இலங்கையை வந்தடைய சுமார் 8 மணித்தியாலங்கள் எடுக்கும்.
மேலும் துருக்கியில் இருந்து திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் இந்த விமான சேவை நடைபெறும்.
அடுத்த வருடம் முதல் வாரத்தில் 7 நாட்களுக்கு ஒருமுறை துருக்கி விமானங்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 10 வருடங்களாக துருக்கிய ஏர்லைன்ஸ் மாலைதீவு வழியாக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு தனது விமானங்களை இயக்கி வந்ததுடன், நேரடி விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதன் மூலம் துருக்கியில் இருந்து இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.