ஐக்கிய தேசியக் கட்சிக்குள் ஏற்படவுள்ள மாற்றம்: அதியுயர் அதிகார குழு அமைப்பு
பிரதான நான்கு பதவிகளைத் தவிர கட்சியின் ஏனைய பதவி நிலைகளை இல்லாது செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என அறியமுடிகின்றது.
இதன்படி தலைவர், தவிசாளர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகள் மாத்திரமே இருக்கும். பிரதித் தலைவர், உப தலைவர், தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட பதவிகள் நீக்கப்படும்.
இதற்குப் பதிலாக மேற்படி பதவிகளை வகித்தவர்கள் உட்பட கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் அதியுயர் அதிகார குழுவொன்று அமைக்கப்படவுள்ளது.
இதற்கேற்ற வகையில் கட்சியின் யாப்பு மறுசீரமைக்கப்படவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆண்டு விழா எதிர்வரும் செப்டெம்பர் 10 ஆம் திகதி கட்சித் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் கொண்டாடப்படவுள்ளது.
இதன்போது கட்சியின் புதிய யாப்புக்கும் அங்கீகாரம் பெறப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.