இலங்கை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அனுமதி!
இலங்கையின் முதலாவது விரிவாக்கப்பட்ட நிதி வசதி மீளாய்வுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இதனடிப்படையில், பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கைகளுக்கு ஆதரவாக இலங்கைக்கு சுமார் 337 மில்லியன் டொலர்கள் கிடைக்கும் என்று இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
இந்த முக்கியமான நடவடிக்கை மூலம், நாட்டின் நீடித்த சீர்திருத்தங்களின் தொடர்ச்சியான முக்கியத்துவம் வலியுறுத்தப்படுகிறது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்புக்கான பாதைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் தூதுவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.