வடகீழ் பருவக்காற்று மழை ஆரம்பம்! நவம்பர் 6 வரை கனமழைக்கு வாய்ப்பு
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக நவம்பர் 06 ஆம் திகதிவரை (அவ்வப்போது ) மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா எதிர்வுகூறியுள்ளார்.
காலநிலை மாற்றம் தொடர்பில் இன்று(30) காலை அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“2023- 2024 ஆம் ஆண்டுக்கான வடகீழ் பருவக்காற்றுக்கான முதல் சுற்று மழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று அதிகாலை 4.00 மணியளவில் தொடங்கியுள்ளது.
இம் மழை தொடர்ச்சியாக நவம்பர் 06 ஆம் திகதிவரை (அவ்வப்போது ) கிடைக்கும் வாய்ப்புள்ளது. இன்று பிற்பகலுக்கு பின்னரும் கன மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் வட கிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கும்.
எனவே இன்று முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் மக்கள் இனிவரும் நாட்களின் எந்நேரத்திலும் மழை கிடைக்கலாம் என்ற எடுகோளினைக் கருத்தில் கொண்டு அதற்கான முன்னேற்பாடுகளுடன் தமது நடவடிக்கைகளை ( பயணங்கள் உட்பட)மேற்கொள்வது சிறந்து” என்றுள்ளது.