அடுத்தடுத்து சரிந்த விக்கெட்டுகள்! ஒற்றை ஆளாய் தூக்கி நிறுத்திய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர்
நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 219 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
சொதப்பிய சூர்யகுமார் யாதவ்
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி ஹாக்லே ஓவல் மைதானத்தில் நடந்து வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தெரிவு செய்தது.
அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் கில் 13 ஓட்டங்களிலும், கேப்டன் தவான் 28 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
ஆனால் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர். அணியின் ஸ்கோர் 121 ஆக இருந்தபோது ஷ்ரேயாஸ் ஐயர் 49 ஓட்டங்களில் பெர்குசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தீபக் ஹூடா (12) நிலைத்து நிற்கவில்லை. இதனால் இந்திய அணி ஓட்டங்கள் குவிக்க தடுமாறியது.
மிரட்டிய வாஷிங்டன் சுந்தர்
அப்போது களமிறங்கிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நியூசிலாந்து அணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். அபாரமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய அவர் 64 பந்துகளில் ஒரு சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 51 ஓட்டங்கள் எடுத்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார்.
வாஷிங்டன் சுந்தருக்கு இது முதல் சர்வதேச ஒருநாள் அரைசதம் ஆகும். இறுதியில் இந்திய அணி 47.3 ஓவர்களில் 219 என்ற கவுரவமான ஸ்கோரை எட்டியது. நியூசிலாந்து தரப்பில் டேரல் மிட்செல், ஆடம் மில்னே தலா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.