கந்த சஷ்டி விரதத்தை எப்போது முடிக்கலாம்?
கந்த சஷ்டி விரதத்தை எப்போது முடிக்கலாம்?
இந்த வருடம் கந்த சஷ்டி விரதம் வழமை போன்று பக்தர்களால் நோற்கப்பட்டாலும் ஆரம்பித்த விரதத்தை எப்போது முடிவுறுத்துவது என்பது தொடர்பில் பல கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொருவரும் தமக்கு ஏற்றாற் போல் திதிகளையும், நட்சத்திரங்களையும் மாற்றியமைக்க முடியாது. இருப்பினும் சில சர்ச்சைக்குரிய விடயங்கள் எம்மிடையே எழலாம். ஆனால் அவற்றுக்கெல்லாம் எமது மூதாதையரகள் தீர்வுகளை வழங்கியிருக்கின்றார்கள்.
அடியவர்கள் விரதங்களை நோற்கும் போது திதி, நட்சத்திரங்களின் அடிப்படையில் அவதானிக்க வேண்டியது அவசியமாகும். இவற்றை ஒழுங்கமைத்து தரும் பஞ்சாங்கங்களிடையே சில கால முரண்பாடுகள் இருந்தாலும் அனைவற்றுக்கும் தீர்வு உண்டு.
இப்போது எது சரி, எது பிளை என்பதை வாதிட வாய்ப்பில்லை. இனி வரும் காலங்களில் இத்தகைய முரண்பாடுகள் ஏற்படாதிருக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
ஐப்பசி மாதத்து பிரதமை முதல் சஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்களும்தான் கந்த சஷ்டி விரதமாக அனுட்டிக்கப்படுகின்றது என்பதனை நினைவில் கொள்ள வேண்டும்.
வாக்கிய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் 09.11.2021 (ஆங்கிலத் திகதி) மாலை 4:29 மணிக்கு பஞ்சமி திதி நிறைவடைந்து 4:30 க்கு சஷ்டி திதி ஆரம்பமாகின்றது. அன்று கூடும் சஷ்டி திதி அடுத்தநாள் 10.11.2021 மதியம் 2:29 க்கு நிறைவடைகின்றது. அன்று 2:30 மணிக்கு சப்தமி திதி ஆரம்பமாகின்றது.
வாக்கிய பஞ்சாங்கதத்தின் அடிப்படையில் சுருக்கம்
09.11.2021 – மாலை 4:29 – பஞ்சமி திதி நிறைவு
09.11.2021 – மாலை 4:30 – சஷ்டி திதி ஆரம்பம்
10.11.2021 – மதியம் 2:29 – சஷ்டி திதி நிறைவு
10.11.2021 – மதியம் 2:30 – சப்தமி திதி ஆரம்பம்
11.11.2021 – மதியம் 12:48 – சப்தமி திதி நிறைவு
பின்னர் அஷ்டமி கூடுகிறது.
திருக்கணித பஞ்சாங்கத்தின்படி
09.11.2021 – காலை 10:36 பஞ்சமி திதி நிறைவு
09.11.2021 – காலை 10:37 சஷ்டி திதி ஆரம்பம்
10.11.2021 – காலை 8:25 சஷ்டி நிறைவு
10.11.2021 – காலை 8:26 சப்தமி திதி ஆரம்பம்
11.11.2021 – காலை 6:50 சப்தமி திதி நிறைவு
11.11.2021 – காலை 6:51 அட்டமி திதி ஆரம்பம்
இரண்டு பஞ்சாங்கங்களின் படியும் நேரம் வேறுபட்டாலும் 09.11.2021 (ஆங்கிலத் திகதியில்) சூரியாஸ்தமனத்தில் சஷ்டி திதி நிற்கின்றது. விரதம் நோற்பவர்கள் பிரதமை முதல் சஷ்டியை பார்க்க வேண்டும். விரதம் என்பது உணவை சுருக்கியேனும், விடுத்தேனும் மனம் பொறிவழிப் போகாது இறை சிந்தனையுடன் இருத்தல் என சுருக்கமாகக் கூறுவர்.
கந்தபுராணத்தின் அடிப்படையில் முருகப்பெருமான் தனது விஸ்வரூபத்தின் மூலம் சஷ்டி திதியில் மம்மல் பொழுதில் சூரபத்மனை வதம் செய்தார் என்று கூறுகின்றது. அது முருகப் பெருமானின் ஆற்றல்களையும், தத்துவங்களையும் உணர்த்துகின்றது.
10ம் திகதி சப்தமி திதி ஆரம்பமாகின்றது. சப்தமி ஆரம்பமாகும் போது விரதம் நோற்கும் காலமாகிய 6 நாட்களும் நிறைவடைந்து விரத நிறைவுக்குரிய (பாறனை) நாளுக்கு வருகின்றோம்.
இந்தியாவில் ஆறுபடை வீடுகளிலும் இன்று சஷ்டி திதி நிற்பதை கொண்டு நாளை விரத காலம் நிறைவடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இலங்கையில் சில வழிகாட்டுதல்களுக்கு அமைய சூரன் போர் என்ற ஒரு விடயத்தை கொண்டு விரத நாட்களை தீர்மானிக்கின்றனர். கந்தசஷ்டி விரதம் என்பது சூரன் போருக்கான காலம் அல்ல என்பதனை அடியவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
சூரபத்மனின் வதம் உணர்த்தும் தத்துவங்களைத்தான் கருத்திற்கொள்ள வேண்டுமேயன்றி அதனை மையப்பொருளாகக் கொண்டு விரதம் அனுட்டிக்கக் கூடாது.
உதாரணமாக கந்தசஷ்டி விரதம் நோற்பவர்கள் சூரன் வதத்தை பார்க்க வேண்டும் என்றும், அப்போதுதான் விரதம் பூர்த்தியடையும் என்றும் வாய்மொழியாகக் கூறுவர். இப்படிப்பட்ட வழிநடத்தல்கள் விரதத்தின் நோக்கத்தை மாற்றி விடுகின்றது. விரதம் என்றால் என்ன என்பது மேலே கூறப்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டை போக்க சில விடயங்களை இங்கே எடுத்துக்காட்டவேண்டி இருக்கின்றது. சில சிவாச்சாரியார்களுடனும், பிரசங்கவாதிகளுடனும் தொடர்பு கொண்டு கேட்ட போது பின்வரும் விடயங்களை முன்வைத்துள்ளனர்.
திதிகளை நிர்ணயிப்பதற்கு சாஸ்திர புஸ்தகங்களில் ஏராளமான விதிகள் உள்ளன. அவை பற்றி அர்ச்சகர்களுக்கும், பிரங்கவாதிகளுக்கும் ஆழமாக தெரிந்திருக்க வேண்டியதில்லை. அது ஒரு துறைசார் விடயம்.
பஞ்சாங்க கணிதர்கள் இது தொடர்பான விடயங்களை முழுமையாக அறிந்திருப்பர். உதாரணமாக ஏகாதசி, சூர்யோதய சமயத்தில் ஒரு மணி நேரம் இருப்பினும் அன்று தான் ஏகாதசி விரதம். ஆனால் ஏகாதசியில் சிராத்தம் என்றால் முதல் நாளாகும். அப்படி சஷ்டிக்கு விரத நிர்ணயம் உண்டு. புகழ்பெற்ற நூலான வைத்தியநாத தீட்சிதம் – திதி நிர்ணய காண்டம்இ விஷ்ணு தர்மோத்திரம் போன்றவை இதனை தெளிவாக விதித்துள்ளன.
அதாவது பஞ்சமியோடு கூடிய சஷ்டியே ஸ்கந்த விரதத்திற்கு உரியது. அதை இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் இரவு வேளையில் சஷ்டி நிற்க வேண்டும். இப்போதைய நிலையை கூறவேண்டும் என்றால் பஞ்சமியுடன் கூடிய சஷ்டியே விசேஷமானது. சப்தமியுடன் நிற்பதை கருத்திற் கொள்ளத் தேவையில்லை. எவ்வாறெனில் ஒரு நாளுக்கு காலை – மாலை என்பது போல, சூர்யோதயம் – சூர்யாஸ்தமனம் போல, பூர்வபக்கம் – அபரபக்கம் போல, வளர்பிறை – தேய்பிறை என்பது போல.
இது மாத சஷ்டிகளுக்கும் (குமாரசஷ்டி, சுப்ரம்மண்ய சஷ்டி முதலிய) பொருந்தும். ஆக அப்படி விரதம் இருந்தவர்கள் மறுநாள் காலை சப்தமி இல்லாத போதும் பாரணை செய்யலாம்.
இவற்றை விரிவாக ஆய்வு செய்து பஞ்சாங்க சதஸ்களில் ஒருமித்த முடிவெடுத்து தமிழகத்து வாக்கிய – திருக்கணித பஞ்சாங்கங்கள் எல்லாம் இன்று 09.11.2021 சஷ்டி திதியை நிர்ணயித்துள்ளன. எனவே இன்று சஷ்டி விரத உபவாசம் இருப்பவர்கள் எந்த சலனமும் அடைய வேண்டியதில்லை.
எங்கள் கோயில் வழக்கப்படி நாளை தான் என்றால் பாரத்தை முருகனிடம் ஒப்புவித்து அப்போதும் சஞ்சலமின்றி விரதம் நோற்றுக்கொள்ளலாம் ஆனால் அறிவுபூர்வமாக சிந்திப்பது அவசியம்.
ஏனெனில் எப்போது ஆங்கிலேயர் வழிநடத்தலில் தமிழ் மக்கள் வாழ ஆரம்பித்தனரோ அன்றே மரபுகளையும், சாஸ்திரங்களையும் அறிவதை அனைவரும் விட்டுவிட்டோம். தமிழர் மரபும், வழிபாடும், ஆகமங்களும், பண்பாடுகளும், பண்டிகைகளும் மக்களுக்கு பல அறிவியல் விடயங்களை போதிக்கின்றன. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தேவையில்லாத விடயங்களை மக்கள் கடைப்பிடிப்பது தவிர்க்ப்பட வேண்டும்.
எனவே கந்தன் அடியவர்கள் 09.11.2021 உபவாசம் இருந்து 10.11.2021 காலை பாறனையுடன் விரதம் நிறைவு செய்வது சரியே என கருத்து தெரிவித்துள்ளனர்.
-ஆய்வும் தொகுப்பும் கலாநிதி.வ.விஜீதரன்-