வலுவடையும் அதிபர், ஆசியர் சம்பள முரண்பாட்டு போராட்டம் – போராட்டத்தில் குதித்த பெற்றோர்.
கடந்த சில வாரங்களாக அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டை நீக்குமாறு நாடளாவிய ரீதியில் அதிபர்களும், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பல மாதங்களுக்கு பிறகு கொரோணா காலத்தில் பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட நிலையிலும் போராட்டங்கள் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தது.
இந் நிலையில் பாடசாலைகளுக்கு தாம் சென்றாலும் குறிப்பிட்ட சில பணிகளையே ஆற்றுவோம் என்று சமூக வலைத்தளங்களில் அதிபர், ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தோர் பதிவுகளை இட்டிருந்தனர். இந்நிலையில் திருகோணமலை மாவட்டம் கந்தளாய் வலயத்துக்குட்பட்ட பாடசாலையான கந்தளாய் அக்ரபோதி தேசிய பாடசாலைக்கு முன்பாக அதிபர், ஆசிரியர்களுக்கு சார்பாக அவர்களது சம்பளத்தை அதிகரிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம் பெற்றோர்களால் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இப் போராட்டத்தின்போது 2022க்கான வரவு செலவுத்திட்டத்தில் ஆசிரியர்களது சம்பளத்தினை அதிகரிக்குமாறும், அவர்களுடைய கௌரவத்தை உரிய முறையில் பெற்றுக்கொடுக்குமாறும் பெற்றோரால் கோசங்கள் எழுப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் இக் கவனயீர்ப்பு போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பெற்றோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.