மீண்டும் மின்வெட்டு…,வழங்கிய வாக்குறுதியை வாபஸ் பெற்றது மின்சார சபை!
மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, மின்வெட்டை அமுல்படுத்தாமலிருப்பதாக இலங்கை மின்சார சபை நேற்றுமுன் தினம் (02) உயர் நீதிமன்றத்திற்கு வாக்குறுதி வழங்கியிருந்தது. எனினும், அந்த வாக்குறுதியை வாபஸ் பெறுவதாக இலங்கை மின்சார சபையின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா உயர் நீதிமன்றத்திற்கு நேற்று அறிவித்துள்ளார்.
உடன் முதல் அமுலாகும் வகையில், குறித்த உறுதிமொழியை திரும்பப் பெறுவதாக காமினி அமரசேகர, குமுதினி விக்ரமசிங்க மற்றும் ஷிரான் குணரத்ன ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில், மனு மீதான பரிசீலனை நிறைவடைந்த பின்னர், ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஷ் டி சில்வா தெரிவித்தார்.
பிரதிவாதிகள் தரப்பினரால் உயர் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட உறுதிமொழியை முடிவுறுத்துவதாக இருந்தால், க.பொ.த உயர்தர பரீட்சை நடைபெறும் காலப்பகுதிக்குள் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகின்றமையை தடுக்கும் இடைக்கால தடையுத்தரவை பிறப்பிக்குமாறு மனுதாரரான மனித உரிமைகள் ஆணைக்குழு சார்பில் மன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
அந்த கோரிக்கையை நிராகரித்து, குறித்த மனு மீதான மேலதிக பரிசீலனையை எதிர்வரும் 07 ஆம் திகதி பிற்பகல் 1.30 வரை ஒத்திவைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.