தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி தீர்மானங்கள்!
தபால் மூல வாக்களிப்புகளை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில், அடிப்படை நிறுவன நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இது தொடர்பான கடிதம் அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு மற்றும் அனைத்து மாவட்ட பிரதி மற்றும் உதவி தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அனைத்து ஊழியர்களுக்கும் சாதாரண அலுவலக நேரம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தேர்தல் கடமைகளுக்கான மேலதிக நேர வேலைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பிரதான அலுவலகம் உட்பட அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலகங்களையும் வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் மூடுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் உரிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வார இறுதி நாட்களிலோ அல்லது விடுமுறை நாட்களிலோ ஏதாவது விசேட கடமைக்காக அலுவலகத்தை திறப்பது அவசியமானால் அதற்கு தேர்தல் ஆணையாளர் நாயகத்தின் முன் அனுமதி பெறப்பட வேண்டும்.
தற்போது பணியில் உள்ள தற்காலிக உதவியாளர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அலுவலர்களின் சேவைகள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அலுவலக நேரத்திற்குப் பிறகு தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும்.
ஊழியர்களின் போக்குவரத்துக்காக பல்வேறு நிறுவனங்களில் இருந்து பெறப்பட்ட அனைத்து வாகனங்களும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தற்காலிகமாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அலுவலகத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் பாதுகாப்பு தொடர்பில் எதிர்காலத்தில் அறிவுறுத்தல் வழங்கப்படவுள்ளதாகவும் அதுவரை பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.